பாஜ தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் நயினார் குறித்து ஓபிஎஸ் சொன்னதை ஏற்க மாட்டோம்: பொங்கும் தமிழிசை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை பார்த்து தினம் தினம் போராட்டம் என்று கூறுகிறார். தினம் தினம் போராட்டம் நடத்தும் அளவுக்கு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன அநீதியை இழைத்து விட்டது? ராகுல் காந்தியை என்ன கூறுவது என்றே தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் கூறியது போல், இந்தியாவில் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது என்று கூறினார். இப்போது இந்திய தேர்தல் ஆணையம் செத்துப் போய்விட்டது என்று கூறுகிறார். இதைப்போல் எதை எடுத்தாலும் செத்துப் போய்விட்டது, செத்துப் போய்விட்டது என்று ராகுல் காந்தி கூறுகிறாரே? ராகுல் காந்தி இப்போது, அருண் ஜெட்லி என்னை மிரட்டினார் என்று, அவர் இறந்த பின்பு இப்போது கூறுகிறார். அருண் ஜெட்லி, ஆவியாக வந்து ராகுல் காந்தியை மிரட்டினாரா, என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை.
பாஜ தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். எனவே, நயினார் நாகேந்திரன் குறித்து, ஓபிஎஸ் சொல்லி இருக்கும் கருத்தை, நாங்கள் ஏற்க மாட்டோம். அதோடு இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் நடத்தி வந்த, ஒரு கட்சித் தலைவரை சென்று பார்க்கின்றனர். அந்தக் கட்சியில் சேர்ந்து விடுகின்றனர். அதிமுக பாஜவுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. எனவே இவ்வாறு செய்கிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு தமிழிசை கூறினார்.