மகதாயி திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம்; ஒன்றிய அரசின் முடிவு கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது: அமைச்சர் எச்.கே.பாட்டீல் ஆவேசம்
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பெலகாவி, ஹூப்பள்ளி- தார்வார், கதக், பாகல்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீருக்காக 40 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்தும் கலசா-பண்டூரி திட்டம் ஏற்கனவே செயல்படுத்த தயாராக உள்ளது. இருப்பினும், கோவாவில் பாஜ அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள ஒன்றிய அரசு, தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது. மாநில பாஜ தலைவர்களோ அல்லது கன்னடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ மற்றும் மஜத நாடாளுமன்ற உறுப்பினர்களோ இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கு அலட்சியமாக உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜவை நிராகரித்த கர்நாடக மக்களை பழிவாங்கும் நோக்கில், சுற்றுச்சூழல் அமைச்சகம் மகதாயி திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது என்பது தெளிவாகிறது.
கோவா சட்டமன்றத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையால் கர்நாடகா அதிர்ச்சியடைந்துள்ளது. மகதாயி தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறு சட்டத்தின் கீழ் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டதன் மூலம் அமலுக்கு வந்துள்ளது. கலசா-பண்டூரி திட்டத்திற்காக மலபிரபா கால்வாய்க்கு 7.56 டிஎம்சி தண்ணீரை திருப்பிவிட கர்நாடகா தனது கோரிக்கையை சமர்ப்பித்திருந்தது. இதில் 3.90 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்குள் கால்வாய்க்கு திசை திருப்ப அனுமதி வழங்க தீர்ப்பாயம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் கர்நாடகா அனுமதிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது.
காளி மற்றும் சஹ்யாத்ரி புலிகள் காப்பகங்களுக்குள் 10.6 ஹெக்டேர் வன நிலம் இருப்பதாக கோவா ஆட்சேபனைகளை எழுப்பியது. இந்த சூழலில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த வனப்பகுதியைப் பயன்படுத்த கடந்த 2024 ஜனவரி 23ம் தேதி பரிந்துரைத்தது. அப்போதிலிருந்து, தேசிய வனவிலங்கு கவுன்சில் அதன் 77வது, 79வது மற்றும் 80வது கூட்டங்களில் எந்த முடிவும் எடுக்காமல் இந்த விஷயத்தை ஒத்திவைத்து வருகிறது. கர்நாடகாவின் மகதாயி திட்டத்தை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.கலசா மற்றும் பண்டூரி திட்டங்களின் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய நீர் ஆணையம் கடந்த 2022 டிசம்பர் 29ம் தேதி அங்கீகரித்தது. கடந்த 2023 ஏப்ரல் 19 அன்று, கோவாவின் அசல் உரிமைகோரல் மீதான இடைக்கால விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கலசா திட்டத்தை நிறுத்த கர்நாடகாவுக்கு எதிராக கோவாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றத் தடைகள் இல்லாமல் இருந்தாலும், கர்நாடகா மீது மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதும், நியாயமான, சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தேவையில்லாமல் தடுப்பதும் கூட்டாட்சி அமைப்புக்கு அநீதி இழைப்பதாகும். நீதித்துறையால் தடைபடாத மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தால் சட்டப்பூர்வமாக தீர்க்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த கர்நாடகாவிற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்காமல் இருப்பது, மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. வட கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றார்.