திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் நேற்று நேரில் சந்தித்து அளித்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாசின் ஒப்புதல் இல்லாமல், கட்சியின் சார்பாக யாரும் ஊர்வலம் அல்லது மக்கள் கூட்டத்தை நடத்த முடியாது. செயல் தலைவர் ஜூலை 25 முதல் எனது அனுமதியின்றி மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் நடைபயணம் செல்ல உள்ளார் என்பது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. செயல் தலைவரின் ஒருதலைப்பட்சமான செயல் குறித்து குழப்பத்தில் உள்ளனர். இது இரு குழுக்களிடையே மோதலுக்கு வழிவகுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறக்கூடும். இந்த சூழ்நிலையில், அன்புமணியின் நடைப்பயண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பது எனது கடமையாகும். செயல் தலைவர் எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும், எனது எழுத்துப்பூர்வ ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லை என அறிவித்துக்கொள்கிறேன். மேலும் அந்த நடைபயணத்துக்கு ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.