அமித்ஷா சர்ச்சை பேச்சுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவலின் விளைவு என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும், அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டதுமாகும். இத்தகைய பொறுப்பில்லாத கருத்து, நாட்டின் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவரிடமிருந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய கருத்து சமூக ஒற்றுமையைப் பாதிக்கிறது. அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகும். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள், பிவ் ஆய்வு நிறுவனம் மற்றும் தேசிய குடும்ப நல ஆராய்ச்சி தரவுகள் முதலியவை கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்களின் பிறப்பியல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது மற்ற சமூகங்களுடன் சமநிலையில் இருப்பதாகவும் தெளிவாகக் காட்டுகின்றன. பீகார் தேர்தல் தருணத்தில் சமூக பிளவை தூண்டும் நோக்கத்துடன் இக்கருத்து கூறப்பட்டதென தெளிவாகிறது.