16 குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவில்லை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரத்தில் நாளை கூடுகிறது: அன்புமணி நீக்கப்படுவாரா?
திண்டிவனம்: பாமக செயல் தலைவர் அன்புமணி 16 குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நாளை (1ம் ேததி) தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் கூடுகிறது. பாமக செயல் தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை கூறி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அளிக்க வேண்டிய காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 19ம் தேதிக்கு பிறகு வழக்கமாக தைலாபுரத்தில் நடக்கும் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் நடத்தவில்லை. அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்கவே ராமதாஸ் இம்முடிவை எடுத்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதால் நாளை (1ம் ேததி) ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி பதில் அளிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
இந்த கூட்டத்திற்குபின் 2ம் தேதி பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதன்பின் தொடர்ந்து 3ம்தேதி மாநில தலைமை நிர்வாக குழு கூடுகிறது. மேற்கண்ட இந்த கூட்டங்களில் அன்புமணி செயல்பாடு குறித்தும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காதது பற்றியும் விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகளை விளக்கி ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.
தைலாபுரம் வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி முதல்கட்டமாக பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படலாம் எனவும், அந்த இடத்திற்கு ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது. அதன்பிறகும் கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி தொடர்ந்து ஈடுபடும்பட்சத்தில் அவரை பாமகவில் இருந்தே நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பாமக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* குற்றச்சாட்டுகள் விவரம்
2024 புத்தாண்டு பாமக பொதுக்குழுவில் மைக்கை தூக்கிப்போட்டு நிறுவனருக்கு எதிராக பேசியது, தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டது, ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வரவிடாமல் பொய்சொல்லி நிர்வாகிகளை தடுத்தது, சமூக ஊடக பேரவையை கையில் வைத்துக் கொண்டு நிறுவனரை, அவருடன் இருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டது, பாமக நிறுவனர் உடனான பேச்சுவார்த்தையை ஏற்காமல் உதாசீனப்படுத்தியது, ராமதாஸ் இருக்கைக்கு அருகில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது, தகவல் ஏதும் தெரிவிக்காமல் பொதுக்குழு பெயரில் தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்தது, பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றியது, ராமதாஸ் நியமனத்தை செல்லாது என அறிவித்தது என்பது உள்பட 16 குற்றச்சாட்டுகள் பட்டானூர் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.