அரசியலில் ஊழல், கருப்பு பணத்தை தடுக்க புதிய விதிமுறை: தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘அரசியலில் ஊழல் மற்றும் கருப்பு பண பயன்பாட்டை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘‘இந்த விவகாரத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ள வழிமுறைகளை தீர ஆராய்ந்து இந்திய அரசியலில் குற்றங்களை குறைக்க கூடிய வகையில், அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை குறித்து அறிக்கையை தயாரிக்க சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் நாட்டில் உள்ள 90சதவீத அரசியல் கட்சிகள் கருப்பு பணங்களை வெள்ளையாக மாற்றக்கூடிய வகையில் முதலீட்டாளர்களிடம் இருந்து கருப்பு பணமாக வசூலிக்கின்றனர்.
பின்னர் கட்சிக்கான கமிஷன் தொகையை கழித்த பிறகு மீண்டும் முதலீட்டாளர்களிடமே வெள்ளை பணமாக வழங்கப்படுகிறது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, பதிவு செய்யப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளையும் இதில் ஒரு தரப்பாக இணைத்து அவர்கள் தரப்பில் பதிலையும் பதில் அறிக்கையில் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.