இதிலுமா அரசியல்?
கரூரில் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் விலை மதிக்க முடியாத 41 உயிர்கள் பறிபோயுள்ளது. அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்து நிவாரணம் அளித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஒரு துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது முக்கியம். ஆளும்கட்சி என்பதால் களத்துக்கு திமுக உடனடியாக வந்து விட்டது. பல எதிர்க்கட்சிகளும் கூட சம்பவ இடத்துக்கு சென்று வந்தன.
ஆனால், மக்களை சந்திப்பது தொடர்பாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து 3 நாட்களாக எந்தப் பதிலுமே இல்லை. மருத்துவமனைக்கு கட்சித் தலைவர்கள்தான் வரவில்லை என்றால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட ஓடி ஒளிந்து கொண்டனர். தவெக கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பு ஏதும் இல்லை என்பதை இது தெளிவாக்கிய நிலையில் தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதில் இதனால் சிக்கல் ஏற்படும். நேரில் மக்களை சந்திக்கும் தைரியம் இல்லாதவர்களுக்கு அரசியல் எதற்கு என்ற மக்களின் கேள்வி அக்கட்சி நிர்வாகிகளின் காதில் ஒலித்ததாகவே தெரியவில்லை.
கரூர் சம்பவத்தை விஜய்யால் எதிர்கொள்ள முடியவில்லை. திரைக் கவர்ச்சியும் கூட்டத்தைக் கூட்டும் நபராகவும் இருப்பதாலேயே தன்னால் அரசியல் தலைவர் ஆக முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவரது அரசியல் வியூகங்களில் சிக்கல் நிறைந்துள்ளது. தலைமையின் தனிப்பட்ட பிரச்னையாகவே இது கருதப்பட்ட நிலையில் துரிதமாக செயல்பட்ட அரசு மீது பழியை திருப்பி விட்டு தப்பிக்கும் மனநிலையிலேயே அக்கட்சி நிர்வாகிகள் இயங்குவது தெளிவாக தெரிகிறது. இந்த துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.
உலகமே அதிர்ந்து போன துயர சம்பவம் நிகழ்ந்த 3 நாட்களுக்குப் பின் ஞானோதயம் வந்தவராக வீடியோ வெளியிட்டுள்ளார் விஜய். நேற்று மாலை அவர் வெளியிட்ட வீடியோவில், நடக்கக் கூடாதது நடந்து விட்டது. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
தனது பிரசார கூட்டத்தால் 41 பேர் பலியானதற்கு தவெக எந்த தவறும் செய்யவில்லை என சொன்னாரே தவிர, அந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்காதது மக்களின் மனநிலையை அவர் இன்னமும் புரிந்து கொள்ளாததையே காட்டுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ரணம், காயம் இன்னமும் ஆறாத நிலையில் அவர்களின் பக்கம் நிற்காமல் அரசியல் செய்வதிலேயே கவனம் செலுத்தும் விஜயின் அரசியல் அவருக்கு மட்டுமல்ல, அவர் பின்னால் செல்ல நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.