அரசியல்வாதி, சினிமாக்காரன் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்: விஜய்யை மறைமுகமாக சாடிய சீமான்
சென்னை: அரசியல்வாதி யார், சினிமாக்காரன் யார் என்பதை அறிந்து மக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அருங்குளம் கூட்டு சாலைப் பகுதியில் தனியார் செம்மரக்காட்டில் ‘மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காக பேசுவோம்’ மரங்களின் மாநாடு நேற்று நடந்தது.
அதில் சீமான் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் இயக்கம் மூலம் ஆட்சி கொண்டு வருவோம், பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரம் வைக்க வேண்டும் என்பதை சட்டமாக கொண்டு வருவோம். மரங்கள் வளர்பதை ஊக்கப்படுத்த 10 ஆண்டு பசுமை திட்டம், பல கோடி பனை திட்டம் செயல்படுத்தி மரம் வளர்ப்பதை சட்டமாக்குவேன். இதற்காக ஊக்கப்படுத்தும் செயல் திட்டங்கள் செயல்படுத்துவேன். மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து நான் சொன்னால் நீ சிரிப்பதும் நடிகர் சூர்யா சொன்னால் ரசிப்பது தான் இங்கு நிலைமை. அரசியல்வாதி யார், சினிமாக்காரன் யார் என்பதை அறிந்து மக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.
கலையை போற்று, கொண்டாடு ஆனால், அதை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும். இங்கு அனைவரும் தலைவர்கள் என்றால், அதனை எப்படி ஏற்றுக்கொள்வது. தன்னையே கரைத்துக் கொண்டு வெளிச்சம் தரும் ஒருவன்தான் தலைவராக இருக்க முடியும். ஒருத்தர் ஆயிரம் சீமான் வந்தாலும் எங்கள் தலைவரை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். அவர், தங்கள் தலைவர் பிறந்தநாள் அன்று திருமணம் நடத்தி வைத்தார். ஆனால், ஒரு மரத்தை கூட நடவில்லை என கூறி சர்ச்சையான பல தகாத கொச்சை வார்த்தைகளை சீமான் பயன்படுத்தினார். மாநாட்டின் நிறைவாக திருவள்ளூர், திருத்தணி சட்டமன்ற தொகுதிகளுக்கு நாதக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துவைத்தார்.