அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கரூரில் நடிகர் விஜய் நடத்திய தவெக ரோட் ஷோ நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைதாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகிய கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது பரிந்துரைகளை நேற்றே வழங்கிவிட்டதாக கூறினார். தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.