கொள்கையை திட்டமாக செயல்படுத்துவதில் முதல்வர் முனைப்பாக இயங்கி வருகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டுக்கான காலநிலை கரிமவாயு நீக்க வழிமுறைகள் மற்றும் காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு தொடக்க விழா (தொழிற்சாலை போன்றவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது), நேற்று நடந்தது. காலநிலை கண்காணிப்பு நடவடிக்கையை, தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் முதல் முறையாக, காலநிலை கரிமவாயு நீக்க நடவடிக்கை முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வாழ்வியல் நெறிமுறைகள் அடிப்படையில், அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற அடிப்படையில் இந்த 4 மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் ஒரு கண் என முதல்வர் கூறுவார்.
கொள்கைகளை திட்டங்களாக செயல்படுத்துவதில் முதல்வர் முனைப்பாக இயங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறியதாவது: தமிழகத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அடிப்படையில் 4 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். சதுப்பு நிலத்தில் இருந்து 60 மீட்டர் தள்ளிதான் தனியார் பட்டா நிலம் இருக்கிறது. அங்கு கட்டுமானத்திற்கு அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.