ரயிலில் பயணி தவறவிட்ட 50 சவரன் நகைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த காவலர்!
கோவை சுப்ரமணிய கோனார் வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(53).இவர் நேற்று தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது,அவரது உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னரே தவறுதலாக ஒரு பையை ரயிலில் விட்டு சென்றது தெரியவந்துள்ளது.
மேலும்,அந்த பையில் 50 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.11000 மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக அவர் இதுகுறித்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனிடையே ரயிலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் அங்கு பை ஒன்று இருப்பதை கண்டு அதனை திறந்து பார்த்த போது அதில் 50 சவரன் தங்க நகைகள்,ரொக்கப்பணம் ரூ.11000 மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
அதனை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் உடனடியாக கோவை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர்,உரிய விசாரணைக்கு பின்னர் பணம், நகை மற்றும் மொபைல் போனை ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் முன்னிலையில் ரவிக்குமாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவலரின் இந்த நேர்மையான செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.