காவல் நிலைய கண்காணிப்பு கேமரா தொடர்பான வழக்கு; இனியும் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி
புதுடெல்லி: காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான உத்தரவை மதிக்காத ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகளைத் தடுக்கும் வகையில், கடந்த 2020ம் ஆண்டே உச்சநீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்கள் மற்றும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் ஆடியோ மற்றும் இரவு நேரக் காட்சிப் பதிவு வசதியுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், விசாரணையின் போது நடைபெறும் நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் குறைந்தது ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மட்டும் கடந்த எட்டு மாதங்களில் 11 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘காவல் நிலையச் சாவுகள் நமது நீதி அமைப்பிற்கே ஏற்பட்ட கறையாகும்; இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வேதனை தெரிவித்தனர். மேலும், ஒன்றிய அரசு நீதிமன்ற உத்தரவுகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதாகக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், ‘பல காவல் நிலையங்களில் கேமராக்கள் இயங்குவதில்லை அல்லது போதிய சேமிப்பு வசதி இல்லை எனக் காரணம் கூறுவதை ஏற்க முடியாது; இனிமேலும் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
கேமராக்களைப் பொருத்துவது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் கடைசி வாய்ப்பாக மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், கேமராக்கள் வேண்டுமென்றே அணைக்கப்படுவதைத் தடுக்கவும், அவற்றின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஐஐடி போன்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் நீதிமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.