போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி
கலிபோர்னியா: போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலியானார். தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (32). அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் துயரச் சம்பவம் குறித்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து தான் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நிஜாமுதீன் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு ஒன்றிய அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். நிஜாமுதீன் தந்தை முகமது ஹஸ்னுதீன் ஓய்வுபெற்ற ஆசிரியர். அவர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் நிஜாமுதீன் தங்கியிருந்த வீட்டில் கத்திக்குத்துச் சம்பவம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைகளை பின்னே கட்டிக்கொண்டு அமரும்படி உத்தரவிட்டதாகவும், ஆனால் கத்தியுடன் நின்றுகொண்டு இருந்த நிஜாமுதீன் போலீஸ் உத்தரவுப்படி செய்யாததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சாண்டா கிளாரா காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அறை நண்பருடன் குளிரூட்டி தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் முற்றிய நிலையில், அறைக்குள் நுழைந்த காவலர்கள் எவ்வித விசாரணையுமின்றி நிஜாமுதீனை சுட்டுக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தங்கள் மகனின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* உணவில் விஷம் வைக்கப்பட்டதா?
நிஜாமுதீன் 2016ஆம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர் இன துன்புறுத்தல், ஊதிய மோசடி, வேலையிலிருந்து தவறான பணிநீக்கம் போன்ற புகார்களை பகிரங்கமாக எழுப்பி வந்தார். இதை தனது இணைய பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
அதில்,’ நான் இன வெறுப்பு, இன பாகுபாடு, இன துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, தவறான பணிநீக்கம் மற்றும் நீதியைத் தடுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். போதும் போதும், வெள்ளையர் மேலாதிக்கம், இனவெறி வெள்ளையர் அமெரிக்க மனநிலை முடிவுக்கு வர வேண்டும். இந்த இனபாகுபாட்டில் எனது உணவில் விஷம், வெளியேற்றம், துப்பறியும் நபர் ஒருவரால் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மிரட்டல் எனக்கு நடந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.