காவலில் இருந்த கைதி சித்ரவதை காஷ்மீரில் போலீசார் 8 பேரை கைது செய்தது சிபிஐ
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பணியில் இருந்த காவலர் குர்ஷீத் அகமது சோஹனை 2023ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கான குப்வாரா எஸ்எஸ்பி முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார். 6 நாள் காவலில் வைக்கப்பட்ட அவரை போலீசார் இரும்பு கம்பிகள், கட்டைகளால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவருக்கு கடுமையாக மின்சாரம் வைத்தும் சித்ரவதை செய்ததோடு, மலக்குடலில் மிளகாயை வைத்தும் கொடுமை செய்ததாக தெரிகிறது.
பிப்ரவரி 26ம் தேதி ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது துணை ஆய்வாளர் ஒருவரால் அவரது பிறப்புறுப்பு பிளாஸ்டிக் பையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது மனைவி புகார் கொடுத்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவை சேர்ந்த 8 போலீசார் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீநகர் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.