சிறப்பாக பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கங்கள்: அரசு அறிவிப்பு
சென்னை: நடப்பு ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் ‘காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் செல் பிரிவில் பணியாற்றி வரும் டிஎஸ்பி பூரணி, திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி,
சென்னை சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனாதத், திண்டுக்கல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தானலெட்சுமி, திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், அரியலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் திலகாதேவி, நாகப்பட்டினம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி என 10 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று, பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
சென்னை சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநரான கூடுதல் டிஜிபி மஹேஷ்வர் தயாள், சென்னை நுண்ணறிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜி மகேஷ், திருநெல்வேலி மாவட்டம் எஸ்பி சிலம்பரசன், சென்னை தலைமையகம், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப்பிரிவு கூடுதல் எஸ்பி பிரவின்குமார், சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் இன்ஸ்பெக்டர் மேரிராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.