காவல்துறை, உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலை ஏற்காதது ஏன்? செல்வபெருந்தகை
கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் 39 பேர் பலியான துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள், வலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. இந்த சம்பவத்தில் பாமர மக்கள், ஏதும் அறியாதவர்கள் இறந்துள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட மரணங்களை தவிர்க்க வேண்டும். விஜய் பிரசாரத்தின் போது காலை 8, 9 மணிக்கே சென்று விட்டோம். பிற்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்றனர். ஆனால் அவர் வந்தது இரவு 7.40 மணிக்கு தான் என்று பிரசாரத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் எங்களிடம் தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. கும்பலில் இருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினர். இது பெரிய கொடுமை. இதுபோன்றவற்றை இனி அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஒரு வழிகாட்டுதல் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்காமல் நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்றம் வழிகாட்டுதலையாவது ஏற்க வேண்டும். எதையும் கேட்காமல் இருந்தால் எப்படி?. தவெக தலைவர் விஜய், அவரது கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறுவதற்கு கூட வரவில்லை. ஆனால் தமிழ்நாடு முதல்வர், நேரில் வந்து டேக்கேர் செய்து விட்டார்.
இரவோடு இரவாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி நிவாரண உதவியை முதல்வர் அறிவித்தார். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இரவோடு இரவாக கரூர் வந்து மக்களுக்கு உறுதுணையாக நின்றுள்ளார். டாக்டர், செவிலியர்கள் தூக்கமின்றி மருத்துவ பணியாற்றியுள்ளனர். அவர்களை பாராட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.