காவல் துறை வாகனம் மோதி பலியான 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஸ்வந்த் (3) மற்றும் அவரது உறவினர் சோனேஸ்வரி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காவல்துறை வாகனம் மோதி பிரசாத், சத்யா, அஸ்வந்த் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்து சோனேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.