தமிழ்நாட்டில் முதல் முறையாக காவலர்கள் தின கொண்டாட்டம்; 46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு ‘முதலமைச்சரின் விருது’: டிஜிபி வழங்கினார்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முதலாக கடந்த 1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்.6ம் தேதி இனி ஆண்டு தோறும் காவலர் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, முதல் காவலர் நாளான நேற்றையை தினம் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதி மொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையினர் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் கொண்டாடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்பு திரையிடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின.
அதேபோல், கடந்த 2023ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம், நகரம் மற்றும் சென்னை மண்டலம் என 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி வெங்கட்ராமன் முதல்வரின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டம் மற்று ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கர்க் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
‘எழுச்சியோடு நடந்தேறிய காவலர் நாள்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 1859ம் ஆண்டு மதராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, காவலர் நாள் கொண்டாடப்படும் என இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தேன். அதன்படி, பதக்கங்கள் வழங்குதல், ரத்த தான முகாம்கள் எனத் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடந்தேறியது காவலர் நாள்.