காவல்துறை தடை போடுகிறது என்று சொல்ல முடியாது விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் கிடையாது: பிரேமலதா பேட்டி
புதுக்கோட்டை: விஜய்யை கண்டித்து திமுகவுக்கு பயம் கிடையாது என்று பிரேமலதா தெரிவித்தார். புதுக்கோட்டையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரை இல்லாத அளவிற்கு 2026 தேர்தல் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இந்த தேர்தலில் புதிதாக நடிகர் விஜய் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கிறார். ஏற்கனவே சீமான் தனியாக நிற்கிறார். இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி பலத்தோடு நிற்கிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடுகள் இதுவரை கூறவில்லை. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் உள்ளது. விரைவில் அதற்கான முழு வடிவம் கிடைக்கும். தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்க்க அனைத்து கட்சிகளும் தயாராகத் தான் இருக்கின்றன.
விஜய்யை கண்டு திமுகவிற்கு பயம் கிடையாது. காவல்துறை வந்து இவ்வளவு தடை போடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், நாளைக்கு ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை நடக்கிறது என்றால் அதற்கு யார் பதில் சொல்வார்கள்? எனவே, இப்படி பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. எனவே, ஒரே கண்ணோட்டத்தில் தடை செய்கிறார்கள் என்று பேசக்கூடாது. அரசியலில் இடையூறுகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவதுதான் வெற்றி. இருந்தாலும் சாதாரண சவால் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.