போலீஸ் வாகனம் பறிப்பு..? 1 கி.மீ நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி: மயிலாடுதுறை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு
அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளார். சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். இந்நிலையில்,
முதலமைச்சர் வருகைக்கு முன் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் டிஎஸ்பி சுந்தரேசன், கடந்த சில நாட்களாக டூ வீலரில் பணிக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று தனது வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரம் உள்ள மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு நடந்தே சென்றார். மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியாக இருந்து, காவல்துறையினரின் தவறுகளை அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தூக்கில் தொங்க தயார்’: டிஎஸ்பி ஆவேசம்
டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் எனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் அதிகாரிகள் தூண்டுதல் பெயரில் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக டார்ச்சர் செய்து வருகிறார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான எனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நான் லஞ்சம் வாங்கியது, நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார். எனக்கு எனது உயிர் முக்கியம் இல்லை. ஆனால் எனது குடும்பத்திற்கு உயிர் முக்கியம். வளைந்து செல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எனக்கு சைகை காட்டினார். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தவறான தகவல்: எஸ்பி விளக்கம்
இதுதொடர்பாக எஸ்பி ஸ்டாலின் கூறும்போது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு 7.4.2025 முதல் (TN 51 G 0817) பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் அலுவலக பணி மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. முக்கிய அலுவலுக்காக கடந்த 11.7.2025ம் தேதி அவர் பயன்படுத்தி வந்த வாகனம் திரும்ப பெறப்பட்டு, மாற்று வாகனமாக (TN 51 G 0616) பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் வாங்க மறுத்து விட்டார். பின்னர் நேற்று (17ம்தேதி) மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பழுதாகி இருப்பதாக கூறி வாங்க மறுத்து விட்டார். தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், டிஎஸ்பிக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் ஊடகங்களுக்கு தவறான தகவலை பரப்பி வருகிறார்.
டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளது. லஞ்சம் ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை. அவர் தவறாக தெரிவிக்கிறார். சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல. அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.