காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: காவலர் வீரவணக்க நாளை ஒட்டி சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பணியின்போது மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார். காவல்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந்தேதி காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து காவலர்களுக்கும், இன்றைய நாளில் வீர வணக்கம் செலுத்தும் விதமாக காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார். மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகருமான எம்.கே.நாராயணனும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "காவலர் வீர வணக்க நாள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணியில் மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டு காசோலை மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார்கள்.