காவலர் வீரவணக்க நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: 175 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959ம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாள் விழாவில், தமிழ்நாட்டின் முதல்வர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியிலிருந்த போது மரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தை சேர்ந்த 110 பேருக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கும், 65 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் பணியிடத்திற்கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மேலும், பணியின் போது வீரமரணமடைந்த திருப்பூர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சம்பள தொகுப்பு திட்டத்தில் தனிநபர் காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலைகள்; பணியின் போது வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரது குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலைகள், மேலும், காவல்துறையில் பணிபுரிந்து விபத்துகளில் மரணம் அடைந்த 3 காவலர்கள் என மொத்தம் 6 காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பள தொகுப்பு திட்டத்தில் எஸ்.பி.ஐ மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் மூலம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் கருணைத் தொகை, என மொத்தம் 5 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண், காவல்துறை உயர் அலுவலர்கள், பணியின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.