காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி
மஞ்சூர் : காவலர் தினத்தை முன்னிட்டு மஞ்சூரில் போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு இரவு பகலாக பணியாற்றும் தமிழ்நாடு காவல் துறையினரை கௌரவிக்கும் வகையில் செப்.6ம் தேதி காவலர் தினம் கொண்டாடப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நீலகிரி மாவட்ட எஸ்.பி நிஷா அறிவுறுத்தலின்படி மஞ்சூர் காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணிகாக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. மஞ்சூர் மின் வாரிய மேல் முகாம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை இன்ஸ்பெக்டர் விஜயா துவக்கி வைத்தார்.
இதில், எஸ்ஐக்கள் பாலசிங்கம் மற்றும் செல்வன் ஆகியோர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து இரு அணிகளாக பிரிந்து கிரிக்கெட் விளையாடி அசத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மஞ்சூர் போலீசார் தெரிவித்தனர்.