கோவை அருகே பரபரப்பு வீச்சரிவாளுடன் பைக்கில் சுற்றிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்
*தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தவருக்கு ‘மாவுக்கட்டு’ சிகிச்சை
பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீச்சரிவாளுடன் வாகனத்தில் சுற்றிய 2 பேரை போலீசார் துரத்திச்சென்று கைது செய்தனர். இதில் ஒரு வாலிபர் தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் போலீசார் மாவுக்கட்டு போட்டனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகில் நேற்றுமுன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது அதில் வந்த 2 பேர் வாகனத்தை நிறுத்தாமல் திருப்பி தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க முற்பட்டபோது வண்டியில் இருந்த ஒருவர் அருகில் உள்ள பாலத்தில் ஏறி கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவரது கையில் எலும்பு முறிந்ததால் வலியால் சத்தம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னால் துரத்திக்கொண்டு ஓடிச்சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், இடிகரை சன் ரைஸ் கார்டன் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (38), இடிகரை சென்னம்மநாயக்கன் பாளையம் தர்மராஜர் கோவில் வீதியை சேர்ந்த வாழவந்தான் மகன் முகேஷ் குமார் (22) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் பிரகாஷ்க்கு கையில் எலும்பு உடைந்தது. இதையடுத்து அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது.
இந்நிலையில் அவர்களது வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ஒரு வீச்சரிவாள், 2 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதையடுத்து அரிவாள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.