பணியில் இருக்கவே தகுதியில்லாத அதிகாரிகள்... உங்களை விட மாவட்ட போலீசே மேல்: சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை முறையை கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், அவர்களைப் பணியில் இருக்கவே தகுதியில்லாதவர்கள் எனச் சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா அமர்வில் நேற்று (நவ. 18) வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி, சி.பி.ஐ.யின் விசாரணை முறையைக் கடுமையாகச் சாடினார். குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி, சி.பி.ஐ.யின் விசாரணைத் தரத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். விசாரணையின் போது நீதிபதி அமானுல்லா கூறுகையில், ‘இவர்கள் (சிபிஐ) முற்றிலும் போலியான அதிகாரிகள்! பணியில் இருக்கவே தகுதியற்றவர்கள். இந்த வழக்கின் விசாரணை ஒரு குழந்தைத்தனமான விசாரணையாக உள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் அமைதியாக இருப்பதற்கும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. அதைப் போய் ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறுவதா? நீங்கள் தாக்கல் செய்துள்ள ஆவணம் பயனற்ற காகித குப்பை. இதில் உறுதியான ஆதாரம் எதுவுமின்றி, வெறும் யூகங்களே உள்ளன. சாதாரண மாவட்ட காவல்துறையினர் உங்களை விட சிறப்பாக விசாரணை நடத்துவார்கள். இதனால்தான் சி.பி.ஐ. மீது யாருக்கும் நம்பிக்கை இல்லாத சூழல் உருவாகியுள்ளது’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் திறமையின்மை குறித்து நீதிமன்றம் தனது உத்தரவில் முறையாகப் பதிவு செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். நாட்டின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பாக கருதப்படும் சிபிஐ குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையின் போது கடுமையாக விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.