விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி வந்தார். மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து இபிஎஸ் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் இபிஎஸ் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வருகை தந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி; கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றிலும், விஷச்சாராயம் அருந்தி சுமார் 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து வேதனையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன்.
உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறினார்.