விஷம் குடித்த நிலையில் காப்பாற்ற முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது அண்ணன் ரகுபதிராமின்(54) மனைவி வெண்ணிலா (45), சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். வேலைக்கு செல்ல வேண்டாம் என ரகுபதிராம் கூறியும் கேட்க மறுத்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ரகுபதிராம், ‘‘என் சொல்லை மீறி வேலைக்கு சென்றால், தற்கொலை செய்வேன்’’ என மிரட்டியுள்ளார்.அதையும் மீறி நேற்று முன்தினமும் வெண்ணிலா வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ரகுபதிராம், விஷம் குடித்துவிட்டு வெண்ணிலாவுக்கு, போனில் தெரிவித்தார். இதையறிந்த தம்பி செந்தில்குமார் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது ரகுபதிராம், அரிவாளால் செந்தில்குமாரின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். ரகுபதிராமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.