போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டில் நுழைந்து மிரட்டல் விடுத்த மர்மநபர்: போலீசார் விசாரணை
சென்னை: சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவின் தனி உதவியாளர் கார்த்திகேயன் என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் தனி உதவியாளராக உள்ளேன். சசிகலாவின் முகாம் அலுவலகம் போயஸ் கார்டன் முகவரியில் உள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக இந்த இடத்திற்கு தொடர்பில்லாத அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவ்வப்போது வந்து நோட்டமிடுகிறார். இரு முறை எங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் காவலாளியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், இந்த டிப்டாப் ஆசாமி இந்த வழியாக வந்து செல்கின்ற பொதுமக்களையும், வாகனங்களையும் தொடர்ந்து நோட்டமிட்டு கொண்டு வருகிறார்.
இவரிடம் நேரில் சென்று விசாரித்தால் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். தன்னை ஒரு காவல்தறை அதிகாரி போன்று சித்தரித்து கொண்டு, ‘போலீசிடம் போய் சொல்லிக்கொள்ளுங்கள், போலீசார் யாரை கைது பண்ணுவார்கள் என்று அப்போது உங்களுக்கு தெரியும். உங்கள் வேலையை போய் பாருங்கள்’ என்று அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார். இவரது செயல் மிகவும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.
இந்த சந்தேகத்திற்குரிய நபரால் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள எங்கள் கழக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் இப்பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுகிறேன். எனவே இந்த நபரை உடனே விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.