போச்சம்பள்ளி அருகே பாதை வசதி கேட்டு கிராம மக்கள் தர்ணா
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே பள்ளிக்கு பாதை வசதி கோரி கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செல்லகுடப்பட்டி ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தனியார் நிலத்தின் வழியாக பள்ளிக்கு வந்து சென்றனர்.
இதற்காக 3 அடி அகலத்திற்கு அதிகாரிகள் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மாணவர்கள் எளிதாக சென்று வரும் வகையில், சாலையை விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி, நேற்று பள்ளி முன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். பின்னர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.