4 முறை அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததால் டிரம்ப் பதற்றத்தில் இருக்கிறாரா? பரபரப்பு தகவல்கள்
டெல்லி: வர்த்தக வரி தொடர்பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசியில் அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததாக ஜெர்மனி, ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன. உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக, ‘அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணிய மாட்டோம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கவிட மாட்டேன்’ என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் வரி தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த கடந்த சில வாரங்களில் அதிபர் டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்ததாகவும் பிரதமர் மோடி பேச மறுத்து விட்டதாகவும் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து வெளிவரும் பிரபல ‘அல்லெஜிமெய்ன் ஜெய்டங்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல், டிரம்பிடம் பேச மோடி மறுத்து விட்டதாக ஜப்பானில் இருந்து வெளிவரும் ‘நிக்கீ ஏசியா’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகளை மறுக்கவும் இல்லை.
இதுகுறித்து இந்தியாவின் முக்கிய தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முக்கிய விவகாரங்களில் தொலைபேசியில் பேசுவது பிரதமர் மோடியின் பாணி இல்லை” என்றார். ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘டிரம்பிடம் பேசினால், ஊகங்களின் அடிப்படையில் தகவல்கள் திரித்து வெளியிடப்படுகின்றன. அதை தவிர்க்க டிரம்பிடம் பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஏனெனில், இந்தியா-பாகிஸ்தான் போரின்போது டிரம்ப் கூறிய கருத்துகளை மனதில் வைத்து அவரது தொலைபேசி அழைப்பை தவிர்த்திருக்கலாம்’ என்றார். ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போராக மாறுவதாக இருந்தது.
அதை நான்தான் தடுத்தேன் என்றும் சர்வதேச அளவில் 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பேச மறுத்துள்ளதால், அதிபர் டிரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக கூறப்படுகிறது.