பிரதமர் மோடிக்கு இன்று 75வது பிறந்தநாள்: சேவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
புதுடெல்லி: பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குஜராத்தின் வத்நகரில் கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது பிறந்தநாள் தினத்தில் பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் தாரியில் 15 வார கால நாடு தழுவிய ‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம்‘ பிரசார இயக்கத்தையும், 8வது ஊட்டச்சத்து மாதத்தையும் தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இது தவிர, பாஜ சார்பில் நாடு முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்த சுதேசி கண்காட்சிகள், வளர்ச்சி அடைந்த இந்தியா குறித்த ஓவியப் போட்டிகள், ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.