ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடெல்லி: அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் வரைவு திட்டத்தை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இதை தீபாவளிக்கு முன் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கூறினார். டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு விரைவு நெடுஞ்சாலைகளை நேற்று திறந்து வைத்த பின் நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:ஜிஎஸ்டி சட்டத்தை எளிமையாக்கவும் வரி விகிதங்களை மாற்றியமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் என்பது நல்லாட்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விரைவில், வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளை மென்மையாகவும் வசதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்த உள்ளோம். தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி கட்டமைப்பின் கீழ் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த தீபாவளிக்கு, இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு இரட்டை போனசை கொண்டு வந்து, அவர்களின் கொண்டாட்டங்களை அதிகரிக்கும். இந்த சீர்திருத்தத்தின் நோக்கம் ஜிஎஸ்டியை எளிமையாக்கி விகிதங்களை திருத்துவதாகும்.ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் வரைவு திட்டத்தை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் முயற்சிகளில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்கும் என நான் நம்புகிறேன் என்றார்.
* எதிர்க்கட்சிகள் மீது மோடி சாடல்
புதிய சாலை திறப்பு விழாவில் மோடி பேசுகையில்,‘‘ இப்போது அரசியலமைப்பின் நகலை வைத்து கொண்டு நடனமாடுபவர்கள் ஆட்சியில் இருந்த போது அநீதியான, பிற்போக்குத்தனமான சட்டங்களை பராமரித்து அரசியலமைப்பின் உணர்வை நசுக்கினர்.டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள அரியானா, ராஜஸ்தான் மற்றும் உபியில் பாஜவின் வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முந்தைய அரசாங்கங்கள் துப்புரவுத் தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்தின. சமூக நீதி பற்றி இப்போது பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சிகள் நாட்டில் இதுபோன்ற பல விதிகளையும் சட்டங்களையும் இயற்றியுள்ளன. அரசாங்கம் இதுபோன்ற சட்டங்களைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்து வருகிறது’’ என்றார்.