பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
புதுடெல்லி: பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கிடையே உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாசுக்கு எதிராக பா.ம.க ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கர்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் வாதிடுகையில்,‘‘கடந்த 1989ம் ஆண்டு பாமக பதிவு செய்யப்பட்டது, 2022 வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு அன்புமணி தலைவராக மூன்று வருடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். 28/05/2022 லிருந்து 28/05/2025 வரை அவர் இருந்தார்.
அதன் பிறகு கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவர் ராமதாஸ் தான் இந்த கட்சியின் நிறுவனர் ஆவார். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி கடிதங்களை ஏற்றுக் கொண்டு பாமக பிரதிநிதிகள் பதவிக்காலம் ஆகஸ்ட் 2026 வரை தொடர்வதாக கூறியுள்ளது. மேலும் அன்புமணி கட்சியின் தலைவராக இருப்பதாக கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவை 2023 ஆம் ஆண்டு நடைபெற்றதாக தவறான ஆவணத்தை தாக்கல் செய்து தன்னுடைய பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பதாக அன்புமணி தேர்தல் ஆணையத்தில கூறியிருக்கிறார்.
ஆனால் 2025 ஆம் ஆண்டில் அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டதாகவும் டாக்டர் ராமதாஸ் தான் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பில் இருந்து கடிதம் கொடுத்தும் பலமுறை மனு அளித்தும் அதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறது. இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தேர்தல் ஆணையம் எங்களது எந்தவித கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரப்பூர்வமாக அன்புமணி தான் பாமக கட்சியின் தலைவராவார்.
எனவே ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது விசாரணைக்கு உகந்தது கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர் உங்களுக்குள் இருக்கும் உள்கட்சி பிரச்சனையில் எங்களை எந்தவிதத்திலும் குறை கூறக்கூடாது. குறிப்பாக பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு என்று தேர்தலுக்கு முன்பாக பட்டியல் வெளியிடப்படும்.தற்போது இந்த இரு தரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவங்களில் இரு தரப்பும் கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. மாறாக கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும்.மேலும் கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை.
தற்போதைய ஆவணங்களின்படி அன்புமணி தலைவராக இருப்பதாக நாங்கள் தெரிவித்தோம். அது உறுதி இல்லை என்றால்,அவர் தலைவர் பதவியில் இல்லை என்பதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் ,எதிர்ப்பாளர்கள் உரிய முறையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. குறிப்பாக கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. மேலும் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரரின் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.
* கட்சி அங்கீகாரம் குறித்து நீதிமன்றம் எதுவும் கூறவில்லை அன்புமணி தரப்பு தகவல்
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறுகையில், பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பான விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என தான் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. மற்றபடி எங்களது அங்கீகாரத்தை அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அன்புமணி ராமதாஸ் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதம் கொடுத்த கடிதங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தான் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த கடிதம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி விட்டதாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறார்கள் ஆனால் அது அவ்வாறு இல்லை. ஏனெனில் இந்த வழக்கின் போது சின்னத்தை முடக்குவது தொடர்பான இந்த கோரிக்கையும் இரு தரப்பும் வைக்கவில்லை என்றார்.
* நீதி வேண்டும் ஜி.கே.மணி டெல்லியில் பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை கண்டித்து தலைநகர் டெல்லியில் ஜன்தர் மந்தர் பகுதியில் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டியில், ‘‘பாட்டாளி மக்கள் கட்சிக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று கேட்டு நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளோம்.அன்புமணி ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை கண்டித்து நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றம் மருத்துவர் ராமதாஸுக்கு ஆதரவாக மிகப்பெரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியே அவர்கள் ரத்து செய்து இருக்கிறார்கள். குறிப்பாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம் தற்பொழுது கட்சியை திருடும் வேலைகளில் இறங்கி இறங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.