பாமக சட்டப்பேரவை தலைவர், கொறடா பதவிகளுக்கு புதியதாக நியமிக்கப்பட்டவர்களை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்.24ம் தேதி சென்னை அலுவலகத்தில் எனது முன்னிலையில் நடந்தது. அதில், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டு புதிய தலைவராக தர்மபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய நியமனங்களுக்கு அன்றே எனது தலைமையில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 24ம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியிருந்தேன். அதனை தொடர்ந்து, விதிமுறைகளின்படி விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாக சபாநாயகர் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், 23 நாள்களாகிவிட்ட நிலையில் பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றி விட்டு, அப்பதவிக்கு புதிதாக தேந்தெடுக்கப்பட்டவரை பேரவைத் தலைவர் அங்கீகரிக்கவில்லை. இதனால் பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்று கூறிக் கொண்டு ஜி.கே.மணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமற்றவை. எனவே, பாமக சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும்.