பாமக பொதுக்குழு நாளை கூடுகிறது: அன்புமணிக்கு கல்தா, காந்திமதிக்கு பதவி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராமதாஸ் ரெடி?
திண்டிவனம்: பரபரப்பான சூழ்நிலையில் பாமக பொதுக்குழு கூட்டம் நாளை (17ம் ேததி) புதுச்சேரி அருகே பட்டானூரில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி விதிகளில் சில திருத்தங்களை கொண்டுவந்து அன்புமணியை கட்சியை விட்டு நீக்க தீர்மானம் கொண்டுவர ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனது மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கி கட்சியை தொடர்ந்து வழிநடத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமகவில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணிக்கு இடையேயான அதிகார போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கட்சியை கைப்பற்றும் போட்டியில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவின் ஆதரவை பெற்று கட்சியை வழிநடத்த ராமதாஸ் முடிவு செய்து இம்மாதம் 17ம் ேததி பொதுக்குழு நடக்கும் என முதலில் அறிவித்தார். ஆனால் அன்புமணியோ முந்திக்கொண்டு கடந்த 9ம் தேதியே மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் 2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
அன்புமணியின் பதவி காலம் மே 28ம் ேததியோடு முடிந்து விட்டது என்றும் அவரது தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் தரப்பை சேர்ந்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் சார்பில் அவரது தனி செயலாளர் சுவாமிநாதன் டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமாருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார்.பாமக கட்சி விதி 13க்கு எதிராக நிறுவனரை அழைக்காமல் நிறுவனரின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்றி சட்டவிரோதமாக அன்புமணி போட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியுள்ளார். தலைவரின் பதவிக்கால நீட்டிப்புக்கான சுயஅறிவிப்பு ஏற்கனவே காலாவதியான நிலையில் அதை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு செய்தது, நிறுவனரால் அங்கீகரிக்கப்படாத துணைச் சட்டங்களுக்கு எதிரானது என அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் அன்புமணி தனது குடும்பத்தினருடன் நேற்று திடீரென தைலாபுரம் தோட்டம் வந்தார். தனது தாய் சரஸ்வதி பிறந்த நாளை முன்னிட்டு அவரிடம் ஆசி பெறுவதற்காக அவர் வந்திருந்தார். அப்போது ராமதாசும், அன்புமணியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தாயிடம் மட்டும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு அன்புமணி சென்னை சென்றுவிட்டார்.இந்நிலையில் ஏற்கனவே ராமதாஸ் அறிவித்தபடி பாமக பொதுக்குழு கூட்டம் நாளை (17ம் ேததி) புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பட்டானூரில் நடக்கிறது. ராமதாசால் திருப்புமுனை பொதுக்குழு என அறிவிக்கப்பட்ட இதில் பங்கேற்க 600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கவுர தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் முகம்மது சையது உசேன், முன்னாள் தலைவர் தீரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், கட்சி நிறுவனரின் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டி தன்னை தானே தலைவராக அறிவித்துகொண்ட அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 80 வயதை கடந்த ராமதாஸ் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்பதால் கட்சியை வழிநடத்த தனது மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க கட்சி விதியில் மாற்றம் கொண்டு வந்து அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலை பெறவும் அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.காந்திமதியை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான் பூம்புகார் மகளிர் மாநாட்டில் காந்திமதியை முதல் தீர்மானத்தை வாசிக்க செய்து கட்சிக்காரர்களுக்கு அவரை அதிகாரபூர்வமாக ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அதன் பின் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி சம்பந்தமாக முடிவெடுக்க நாளை கூடும் பொதுக்குழு ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கும் என தெரிகிறது. அன்புமணி பாஜ கூட்டணியை நோக்கி நகர்ந்து செல்வதால் ராமதாஸ் அதற்கு மாற்றாக ஒரு முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே பட்டானூரில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலே ைமக்கை தூக்கிபோட்டு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராமதாஸ், நான் உருவாக்கிய கட்சி இது. என் பேச்சை கேட்காதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என கூறியிருந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பாமக இரண்டாக பிளவு பட்டது. கட்சி பிளவு பட்ட இடத்திலிருந்தே ராமதாஸ் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அன்புமணியை கட்சியிலிருந்து வெளியேற்றி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவார் என தெரிகிறது.