ராமதாஸ் கூட்டத்திற்கு சென்ற பாமக நிர்வாகியின் கார் உடைப்பு: அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர் மீது புகார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளரின் கார் கண்ணாடியை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ரவி(55). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளரான இவர் நேற்று முன்தினம் தனது காரை கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலம் அருகே நிறுத்திவிட்டு காவேரிப்பட்டணம் முன்னாள் எம்எல்ஏ மேகநாதனின் காரில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் திரும்பினர்.
அப்போது மேம்பாலம் அருகே நிறுத்தியிருந்த ரவியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்திற்கு சென்றதால், அன்புமணியின் ஆதரவாளரான கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் மோகன்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எனது காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.