ராமதாசின் பாமக, தேமுதிக கட்சிகள் இணைய திட்டம்?; திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்: கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம்
சென்னை: திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பான விவாதம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அது தொடர்பான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இப்போதே தீவிரமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், எதிர்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. நிர்பந்தத்தின் அடிப்படையில் கூட்டணி வைத்திருப்பதாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததும் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு இதுவரை மற்ற கட்சிகள் எதுவும் சேரவில்லை. எனவே, அதிமுக, பாஜக தவிர்த்து வேறு யார் யாரெல்லாம் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்று அதிமுகவினர் கூட உறுதியாக சொல்ல முடியாது. அந்த நிலையில் தான் அதிமுக உள்ளது. ஏற்கனவே அக்கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தும் அவர்கள் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாக தேமுதிக, பாமகவும் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கின்றன. எனவே, சிறு சிறு கட்சிகள் கூட அதிமுக கூட்டணியில் இணைய முன்வராததது அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தந்துள்ளது.
ஆனால், திமுகவோ கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட வெற்றிக் கூட்டணியை தற்போது வரைத் தொடர்ந்து வருகிறது. கூட்டணி தற்போது வரை கலையாமல் இருப்பது திமுகவின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதம் லேசான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்து சென்றனர்.
இவர்கள் மூவரும் முதல்வரின் உடல் நலனை விசாரிக்கவே வந்து சென்றதாக சொல்லப்பட்டாலும் இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை உற்று பார்க்க வேண்டி உள்ளது. இந்த சந்திப்பின் போது அரசியலும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை தேமுதிக சரியான முடிவை முன்னதாகவே எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி பார்த்தால், திமுக கூட்டணியில் தேமுதிக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி பலம் பொருந்தியதாக மாற்றுவதோடு, எதிர் கூட்டணியை பலவீனமாக்கும் நடவடிக்கையை முதல்வர் துல்லியமாக செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு கட்சியும் சேராத நிலையில், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்தும் இன்னும் ஒரு கட்சிகள் கூட சேரவில்லை. அதேபோன்று தமிழகத்தின் புதிய வரவான தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், தனது தலைமையில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதுவரை விஜயுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 50வது திருமண நாளை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில், திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு முதல்வர் விருந்து வைத்தார். கூட்டணி கட்சியினருடனான இந்த சந்திப்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், திமுக கூட்டணிக்கு கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் முக்கிய கட்சிகளான தேமுதிக, ராமதாசின் பாமக ஆகிய இரண்டு கட்சிகள் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் திமுக கூட்டணி தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த தகவல், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.