என் உயிர்மூச்சு உள்ளவரை நான் நியமித்தவர்களே நிரந்தரமானவர்கள்: பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்
திண்டிவனம்: என் உயிர்மூச்சு உள்ளவரை நான் நியமித்தவர்களே நிரந்தரமானவர்கள் என பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டத்தில் ராமதாஸ் ஆவேசமாக பேசியுள்ளார். பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று முன்தினம் ஒருமித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் ராமதாசிடம் வழங்கியது. குழுவின் அத்தனை உறுப்பினர்களும் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாசே முன்னின்று கட்சியை வழிநடத்த வேண்டுமென முழு ஆதரவை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை கட்சியினருடன் ஆலோசனை நடத்தி முடிவை ராமதாஸ் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
பாமகவிலிருந்து அன்புமணியை நீக்குவது, தேர்தல் பணியை துரிதப்படுத்துவது சம்பந்தமாக நேற்று தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள 439 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில நிர்வாகிகளை தவிர அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ராமதாசுடன் அவரது மூத்த மகளும், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரைக்கு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் தங்கள் முழு ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒருசிலர் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராக நியமிக்க வலியுறுத்தினர். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பாமகவின் நிலைப்பாட்டை ராமதாஸ் அறிவிக்குமாறு பெரும்பாலான நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது ராமதாஸ் பேசுகையில் என் உயிர் மூச்சு உள்ளவரை நான் நியமித்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களே நிரந்தரமானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். விரைவில் அறிவிப்பு வரும். அதுவரை அமைதி காத்து கட்சிப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று (3ம்தேதி) தைலாபுரத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி விவகாரம் மற்றும் கட்சி வளர்ச்சிக்காக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துகள் சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்தி நாளை (வியாழன்) செய்தியாளர்கள் சந்திப்பில் சில அதிரடி முடிவுகளை அறிவிப்பார் என தெரிகிறது.