பாமகவில் அதிரடி மாற்றங்கள்: அன்புமணிக்கு எதிராக வாரிசுகளை அடுத்தடுத்து களமிறக்கும் ராமதாஸ்; முகுந்தனுக்கு பதில் சுகந்தன்
திண்டிவனம்: பாமகவில் அதிகார போட்டி ஏற்பட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டு ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், ‘ஐயா பாமக’ என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கையில் ராமதாஸ் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் 10.5 சதவீத இடஒதுக்கீடுகோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு டிச.12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நேற்று முன்தினம் ராமதாஸ் அறிவித்தார்.
மாவட்டம் வாரியாக தலைமை தாங்குவோரின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆர்ப்பாட்டத்தில் சுகந்தன் பரசுராமன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ராமதாசின் மூத்த மகளும் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தியின் மூத்த மகன் சுகந்தன் ஆவார். டாக்டரான இவர் சென்னையில் வசித்து வருகிறார். ஸ்ரீகாந்திக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன்தான் சுகந்தன், 2வது மகன் பிரித்திவீ. இவர்தான் அன்புமணியின் மகளை மணந்தவர். 3வது மகன்தான் முகுந்தன். இதில் முகுந்தனுக்கு பாமகவில் இளைஞர் சங்க பதவியை ராமதாஸ் வழங்க முன்வந்தபோது அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் கட்சி இரண்டாக பிளவுபட்டது.
அதன்பின்னர் முகுந்தன் கட்சியில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராக நியமித்த ராமதாஸ், ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு இளைஞர் சங்க தலைவர் பதவியை மீண்டும் வழங்கினார். தற்போது ராமதாசுக்கு ஸ்ரீகாந்திதான் உதவியாக இருந்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக ராமதாஸ் முன்புபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக கட்சி பணியாற்ற முடியாது என்பதால் செயல் தலைவராக உள்ள காந்திதான் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.எனவே தாய் ஸ்ரீகாந்திக்கு, சுகந்தன் உதவியாக இருப்பார் என கருதிய ராமதாஸ், அவரை கட்சி பணிக்கு இழுக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தான் சுகந்தனுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை கொடுத்து தனது சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அவரை தலைமை தாங்க ராமதாஸ் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் பாமக மாவட்ட செயலாளர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுகந்தனை, கட்சிக்காரர்களுக்கு ராமதாஸ் அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின் ஸ்ரீகாந்தியுடன், சுகந்தனும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நடவடிக்கையில் தீவிரமாக பங்கேற்பார் என தெரிகிறது. இதன்மூலம் தேர்தல் ஆணையம் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு ஏற்றாற்போல் தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ராமதாஸ் முழு பலத்துடன் எடுத்து வருவதால், அன்புமணிக்கு தகுந்த பதிலடி இருக்கும் என பாமக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.