பாமக அலுவலக முகவரி சூழ்ச்சியாக மாற்றம்; அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி
விழுப்புரம்: பாமக அலுவலக முகவரியை திலக் தெருவுக்கு மாற்றி மோசடி செய்துள்ளதாக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்து, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதாக பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி; பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர். பாமக அலுவலக முகவரி சூழ்ச்சி, கபட நாடகத்தினால் மாற்றப்பட்டுள்ளது. பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரி 63 நாட்டு முத்துநாயக்கன் தெரு, தேனாம்பேட்டை என்பதை திலக் தெருவுக்கு மாற்றி உள்ளனர். பாமக அலுவலக நிரந்தர முகவரி தேனாம்பேட்டையில் இருந்து திலக் தெருவுக்கு மாற்றப்பட்டது எப்படி?.
மக்களை திசை திருப்பவே பாமக அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்துள்ளார்கள். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரியை மாற்றியதால் அன்புமணிதான் தலைவர் என கூற முடியாது. பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி என்பது மே 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. மே 28ம் தேதியுடன் பதவிக் காலம் முடிந்த அன்புமணி, பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்? மாமல்லபுரத்தில் அன்புமணி தரப்பு கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது.
நிர்வாகக் குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மருத்துவர் ராமதாஸ். பாமகவின் நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான். தலைவர் பதவியில் இருந்து மட்டுமல்ல; செயல் தலைவர் பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமதாஸை எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதை இழிவுபடுத்துவதை ஏற்க இயலாது என்றும் கூறினார்.