பாமகவில் காந்திமதிக்கு பதவியா: எச்.ராஜா ஆசை நிறைவேறுமா
அதைத் தொடர்ந்து பாமகவில் தங்கள் குடும்பத்ைத சேர்ந்த பெண்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் கூறிவந்த நிலையில் தற்போது உங்களின் மூத்த மகள் காந்திமதி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாரே என கேட்டதற்கு, செயற்குழு கூட்டம் மட்டும் இல்லை, எப்போதோ கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கி விட்டார் எனத் தெரிவித்தார். அப்படியெனில் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படுமா என நிருபர்கள் கேட்க, தற்சமயம் இல்லை என கூறியதோடு போக... போக... தெரியும்... என்ற பாடலை ராகத்துடன் பாடியவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து தைலாபுரம் வட்டாரத்தில் விசாரித்தபோது, அன்புமணி மீதான கோபம் ராமதாசுக்கு குறையவே இல்லை. மாறாக அவரது செயல்பாடுகளால் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என்று தெரிவித்தனர். அதேவேளையில் தந்தைக்கு ஆறுதலாக மூத்த மகள் காந்திமதி அவ்வப்போது தைலாபுரம் வந்து ஆறுதல் கூறி வருவதோடு, நான் இருக்கிறேன் என தைரியமும் ஊட்டி வருகிறார். இதனால் மூத்தமகள் காந்திமதி மீது ராமதாசுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் பரசுராமன் முகுந்தனுக்கு பதிலாக நேரடியாக காந்திமதியை அவர் கட்சியின் முக்கிய பதவியில் விரைவில் அமர்த்துவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கும்பகோணத்தில் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதலாவதாக பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளோம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமே அறிவிப்பு வெளியே வரும். கடந்த 8ம் தேதி நடந்த மாநில செயற்குழுவில் 2500 பேர் பங்கேற்றனர். 800க்கும் மேற்பட்ட கார், வேன்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகத்துடனும் தொண்டர்கள் வந்தனர் என்றார். பின்னர் நிருபர்கள், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா ராமதாசும், அன்புமணியும் சேர்ந்து இருந்தால் கண்ணுக்கு அழகு என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அது அவருடைய ஆசையையும், விருப்பத்தையும் கூறியுள்ளார். நிறைவேறுமா என்பது போகப்போக தெரியும் என்று பாட்டு பாடியபடி எழுந்து சென்றார்.
* ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் வந்த அன்புமணி
கும்பகோணத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது, இன்சியலாக வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளலாம் என புதிய உத்தரவை போட்டார். இதனால் அன்புமணி ஆடிப்போய் இருப்பதாக தகவல் வெளியாகின. ராமதாஸ் கும்பகோணத்தில் உள்ள நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தைலாபுரம் வந்தார் அன்புமணி.
தாயார் சரஸ்வதியை சந்திக்க அவர் வந்திருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தனது செயல்பாட்டுக்காக தாயிடம் வருத்தம் தெரிவித்து சமாதான முயற்சியில் ஈடுபடலாம் அல்லது தந்தை ராமதாஸ் அடுத்தடுத்து எடுத்துவரும் நடவடிக்கைகளால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆதங்கத்துடன் முறையிடலாம் என தெரிகிறது. ராமதாஸ் இல்லாத நேரத்தில் அன்புமணி திடீரென வந்திருப்பதால் தைலாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* பொதுக்குழுவில் அன்புமணி படம்: ராமதாஸ் கோபம்
கும்பகோணம் பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்களில் அன்புமணி படம் இடம் பெற்றிருந்தது. இதுபற்றி ராமதாசிடம் நிருபர்கள், உங்களுடைய பேச்சை அன்புமணி கேட்கவில்லை என்று நீங்கள் கூறிய நிலையில், உங்கள் கட்சி நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனரே என்று கேட்டனர். அதற்கு ராமதாஸ், மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினுக்கு அன்புமணியின் மீதான பாசம் இன்னும் போகவில்லை என்று கோபமாக பதில் அளித்தார்.