சிகிச்சை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து, நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உறவினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு மருத்துவமனை வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்தேன், அதற்கு முன்பாகவே நல்ல செய்தி வந்தது. இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். வைகோவுக்கு காய்ச்சல் தணிந்துவிட்டது, அவரும் நலமுடன் இருக்கிறார். கரூர் சம்பவம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனை பற்றி பேசிகொண்டே இருக்க வேண்டாம். அது ஒரு சோகம் சம்பவம் தான், பேசி கொண்டு இருந்தால் சோகம் போகிவிடாது. இனிமேல் இது போன்று நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.