தைலாபுரம் தோட்டத்தில் செப்.1ம் தேதி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்.!!
காஞ்சிபுரம்: தைலாபுரம் தோட்டத்தில் செப்டம்பர் .1ம் தேதி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இருவரும் பாமக போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்த நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 13 தீர்மானங்களை முன்மொழிந்தன. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்திருந்தது. அதன்பிறகு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதற்கான காலக்கெடு நாளை (30ம்தேதி) முடிவடையும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அன்புமணிக்கான காலக்கெடு முடியும்வரை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 19ம்தேதிக்கு பிறகு வழக்கமாக தைலாபுரத்தில் நடக்கும் வியாழன் செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் தவிர்த்தார். இதனிடையே நேற்றும் (28ம்தேதி) செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் ரத்து செய்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்கவே ராமதாஸ் இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் மீது அன்புமணி பதிலளிக்க நாளையுடன் கெடு முடியும் நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடுகிறது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.