மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படி பேசமாட்டார்; அன்புமணிக்கு தலமைப் பண்பு இல்லை என்பது உறுதி: ராமதாஸ் காட்டம்!
விழுப்புரம்: ஐ.சி.யு.வில் இருந்ததால் பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது , ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்தார். மேலும், அவர் ஐ.சி.யு.வில் இருந்ததால் பார்க்க முடியவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி.
மருத்துவமனையில் நான் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறவில்லை. இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாடு மேய்க்கும் சிறுவனை கூட அன்புமணி போல பேசமாட்டான். அன்புமணி தலைமையில் செயல்படுவது பாமக அல்ல அது ஒரு கும்பல். பாமகவுக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. என் வளர்ப்பு சரியானால் 21 பேரை சேர்த்து தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும் என ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.