ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி..!!
சீனா: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றார். தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். 2019ம் ஆண்டுக்கு பின்னர் 7 ஆண்டுகள் கழித்து பிரதமர் சீனா சென்றுள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதலுக்கு பிறகு முதல்முறையாக சீனா சென்றார். சீனாவின் தியான்ஜெனில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.