காங்கயம், வெள்ளகோவிலில் மானாவாரியில் உழவுப் பணி தீவிரம்
காங்கயம் : காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கடந்த 15 நாட்களாகவே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. புரட்டாசி மாதத்தில் சில பகுதிகளில் விதைப்புக்கு போதிய அளவு மழை பெய்த நிலையில் தற்போது பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளு, நரிப்பயறு, பாசிப்பயறு, சோளம், மொச்சை, தட்டை, உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விதைப்பு செய்யத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களில் நரிப்பயறு, கொள்ளு, சோளம் ஆகிய பயிர்களைத்தான் விதைப்பு செய்வர். காரணம் இந்தப் பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக இந்தப் பயிர்கள் பயன்படுகிறது.
விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தானிய மண்டிகளில் மானாவாரி பயிர்கள் விதை விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நரிப்பயறு கிலோ ரூ.170, கொள்ளு ரூ. 45, சோளம் ரூ. 50, பாசிப்பயறு ரூ. 140, தட்டைப்பயறு ரூ. 100, உளுந்து ரூ. 120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது, நடப்பாண்டு மழை பரவலாக பெய்துள்ளதால் விதைப்பு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யுமானால் விதைத்த தானியங்களை அறுவடை செய்துவிடலாம். இல்லையெனில் முதலுக்கே மோசமாகத்தான் முடியும் என்றனர்.