தஞ்சை அருகே புதுஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
தஞ்சாவூர் : தஞ்சையில் இருந்து வெட்டிக்காடு செல்லும் பகுதியில் புதுஆற்றில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆறு கழிவுநீரோடையாக மாறி வருகிறது. ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுத்து, தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வானம் பார்த்த பூமியாக இருந்த பகுதிகளும் வளம்பெற வேண்டி வெட்டப்பட்டது தான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணை கால்வாய். இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரை 149 கி.மீ. நீளமுடையது இந்த புதுஆறு.
தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 2.29 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி அளித்து வரும் இந்த ஆறு மூலம் 694 ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போது இந்த ஆற்றில் முழு அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஆற்றில் ஏற்கனவே கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மா கோல் அட்டைகள், இறந்த கால்நடைகள், தண்ணீர் பாட்டில்கள், மதுபாட்டில்கள் எல்லாம் தண்ணீரில் அடித்து செல்லப்படுகின்றன. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் வீட்டில் உள்ள கழிவுகளை எல்லாம் தண்ணீரில் பலர் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.
ஆற்றில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டாலும் யாரும் கேட்பதில்லை. இந்த கழிவுகள் எல்லாம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாலும் மதகுகள், சிமெண்டு தடுப்புகள் இருக்கக்கூடிய இடங்களில் தேங்கி விடுகின்றன. தஞ்சை புதுஆற்றின் கரையோரம் வெட்டிக்காடு செல்லும் வழியில் வல்லம் வாரி செல்கிறது. இந்த வல்லம் வாரியானது புதுஆற்றின் மேல்பகுதியில் செல்கிறது.
வல்லம் வாரியின் அடிப்பகுதியின் வழியாக புதுஆற்றின் தண்ணீர் சீறிபாய்ந்து செல்லும் வகையில் தொழில்நுட்பத்துடன் தண்ணீர் செல்லும் பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தண்ணீரில் அடித்து வரப்படும் கழிவுகள் எல்லாம் இந்த வல்லம் வாரி புதுஆறு சந்திக்கும் பகுதியில் தேங்கி கிடக்கிறது. மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், செருப்புகள், இறந்த கால்நடை, பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாய தாமரை போன்றவை மொத்தமாக தேங்கி கிடக்கிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகளை அகற்றாமல் விட்டால் தண்ணீரின் அளவை குறைக்கும்போது அவை அங்கிருந்து மிதந்து சென்று மதகுகளில் சிக்கி கொள்ளும்.
அப்படி சிக்கி கொண்டால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கும்போது அந்த கழிவுகள் எல்லாம் கிளை வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.தண்ணீருடன் பிளாஸ்டிக் கழிவுகளும் வயல்களுக்கு சென்றால் மண்ணின் தரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
வானம் பார்த்த பூமியாக இருந்த இடத்தில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக மனிதர்களால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட புதுஆற்றை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை தடுத்து ஆற்றை தூய்மையாக பராமரிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.