பிளாஸ்டிக் கவர், தொட்டிகள் வருகையால் மண், சிமெண்ட் தொட்டி வியாபாரம் பாதிப்பு
*கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
திருப்பூர் : செடிகள் வளர்ப்பதற்கு பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் தொட்டிகள் வருகையால் மண், சிமெண்ட் தொட்டி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலையடந்துள்ளனர். பெருகி வரும் நகரமயமாக்கலில் கான்கிரீட் கட்டிடங்களும், வாகனங்களின் புகை மூட்டங்களுக்கு மத்தியில் பசுமை சூழல் மற்றும் பரப்பு மிகவும் குறைந்து வருகிறது.
இதனால், காற்று மாசு, வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கால நிலை மாற்றமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்தவும், இயற்கை சூழலை அதிகரிக்கச்செய்யவும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் செடி, மரம் வளர்ப்பை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
வேளாண்மை துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் செடி விதைகள், மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பொதுமக்களும் கொரோனா காலத்திற்கு பின் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் ஆகியவற்றை அமைப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
ஆனால், அதிலும் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல இயற்கையாய் மண் தொட்டிகள் அல்லாது பிளாஸ்டிக் தொட்டிகளை பயண்படுத்தி வருவது இயற்கைக்கு மாசு ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பாரம்பரிய முறையில் வீட்டின் முன் அல்லது காலியிடங்களில் மண்ணில் குழி தோண்டி செடிகளை வளர்த்து பராமரிப்பது உண்டு. ஆனால், தற்போது இடப்பற்றாக்குறை, இடம் மாற்றம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தொட்டிகளில் வைத்து வளர்த்து வருவது அதிகரித்துள்ளது. அதிலும் மண் தொட்டிகள் இயற்கை பொருளால் உருவாக்கப்படுவதால் செடிகள் வளர்வதற்கு ஏற்ற காற்றோட்டமும், ஈரப்பதமும் சரியான சுழற்சியில் கிடைப்பதால் நன்கு வளர்ந்தது.
மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் வெயிலில் அதிக வெப்பம் உறிஞ்சாமல் செடிகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதால் அதிக நாட்கள் பசுமையாக வளரும். நீர் அதிகம் தேங்காமால் வடிகட்டி செல்வதால் வேர் அழுகுதல், புழு தாக்குதல் போன்றவை குறையும்.
அதே நேரத்தில் பிளாஸ்டிக் தொட்டிகள் சூரிய ஒளியில் இருந்து அதிக வெப்பத்தை உறிஞ்சி மண்ணின் வெப்பநிலையை உயர்த்துவதால் செடிகளின் வேர் வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது, பிளாஸ்டிக் தொட்டிகள் அதிக ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வதால் பூஞ்சை மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது.
பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் தொட்டிகள் காலப்போக்கில் குப்பைகளாக மாறிவிடுகிறது. மக்காத தன்மை கொண்ட அவைகள் இயற்கைக்கு தீங்காய் அமைந்து விடுகிறது. இதே மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் உடைந்தாலும் மண்ணோடு மண்ணாய் மக்கி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
எனவே, அடுக்கு மாடி குடியிருப்பு, இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சிலர் பிளாஸ்டிக் தொட்டிகளை பயண்படுத்தினாலும், வாய்ப்புள்ள மக்கள் மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகளில் செடி வளர்க்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் சிறிய அளவிலான தொட்டிகள் 40 ரூபாய் முதல் 100 ரூபாய், பெரிய அளவிலான தொட்டிகள் 120 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் தொட்டிகள் 15 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அரசுக்கு கோரிக்கை
உழவர் மற்றும் வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இலவச நாற்று மற்றும் மரக்கன்றுகளை வழங்குகின்றனர், இவைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படுகிறது.
இவை மண்ணில் வைக்கப்படும்போது மக்கா குப்பையாகிறது. அதற்கு மாற்றாக சிறிய அளவிலான மண் தொட்டிகளில் வைத்து வழங்கபடும்போது மண்பாண்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் மீட்டெடுக்கப்படும், மண்ணிக்கும் பாதிப்பு ஏற்படாத சூழல் உருவாக்கப்ப்டும் என தெரிவிக்கின்றனர்.