ஊட்டி நகரில் பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரங்கள்
ஊட்டி : ஊட்டி நகரில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. அவற்றை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டில் இல்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடிநீர் வசதிக்காக பொது இடங்களில் சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்கள் (வாட்டர் ஏடிஎம்.,) அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் தவறுதலாக கொண்டு வர கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தனியார் நிறுவனத்தின் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி அனுப்புவதற்காக அவற்றை நசுக்கி சேகரிக்கும் (பிளாஸ்டிக் கிரஸ் ரீசைக்கிளிங் மெசின்) இயந்திரங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தர கூடிய ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகம், ஊட்டி மார்க்கெட் புளூமவுண்டன் வாட்டர் ஏடிஎம்., அருகே, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட்டது.
இதில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே செலுத்தினால் நசுக்கி சேகரித்து கொள்ளும். இயந்திரம் முழுமையாக நிறைந்தவுடன் அதில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சிக்காக எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் பயன்பாடின்றி தூசுபடிந்து காட்சியளிக்கின்றன. இவற்றை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.