ஒரேநாளில் மரக்கன்று நடுதல்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரேநாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழல் பகுதிகளில் நட வேண்டும். அவ்வாறு மரக்கன்றை நட்டுவைத்த பின்னர் தாய் மற்றும் பாதுகாவலருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனை https://ecoclubs.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி அளவில் மகிழ்முற்றம் குழுக்கள் அடிப்படையில் போட்டித் தன்மையை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கியும் ஊக்குவிக்கவேண்டும். இதற்கான மரக்கன்றுகளை மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழுவினர் வனத்துறையுடன் இணைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.